புதுச்சேரி அரசியல் கட்சிகள் வரவேற்பு


புதுச்சேரி அரசியல் கட்சிகள் வரவேற்பு
x

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்ற சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை புதுவை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

புதுச்சேரி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்ற சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை புதுவை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், கவர்னருக்கும் (துணைநிலை கவர்னர்) இடையேயான நிர்வாக மோதல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்பில் கவர்னர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாக அதிகாரம் உள்ளது என்றும் கூறியுள்ளது. இதற்கு புதுவை அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நாராயணசாமி

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

டெல்லியில் அதிகாரிகளை நிர்வகிக்கும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளதா? முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு உள்ளதா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த தீர்ப்பில், இந்திய நாட்டில் அரசியல் சாசன சட்டப்படி ஆட்சி நடக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு என்று தனித்தனி அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்படுகிறது. அதை நிறைவேற்ற வேண்டியவர்கள் அதிகாரிகள். அவர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் ஜனநாயகம் பொய்யாகிவிடும்.

நான் முதல்-அமைச்சராக இருந்தபோது கவர்னராக இருந்த கிரண்பெடிக்கு கோப்புகள் அனுப்பியபோது அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. சில கோப்புகளில் அரசின் முடிவுகளை மாற்றி எழுதினார். அதை எதிர்த்து தற்போது அமைச்சராக உள்ள லட்சுமி நாராயணன் மூலம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தோம். அந்த வழக்கில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது.

மரண அடி

கிரண்பெடி அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதுதொடர்பான 2 நீதிபதிகளை கொண்ட அமர்விலும், அன்றாட நிர்வாகத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் கவனிக்கவேண்டும். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவேண்டும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கோப்பை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியி ருந்தது.

ஆனால் அந்த தீர்ப்பை கிரண்பெடி மதிக்கவில்லை. எனவே அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. மக்கள் அரசின் மீது நியமிக்கப்பட்டவர் அதிகாரம் செலுத்தினால் ஜனநாயகம் வெற்றிபெறாது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள இந்த தீர்ப்பு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு மரண அடி கொடுத்துள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

சிவா எம்.எல்.ஏ.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. கூறுகையில், பா.ஜ.க. ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் ஆட்சி செய்ய மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கவர்னர்கள் மூலம் தொடர்ந்து அதிகாரத்தை செலுத்தி வருகிறது. பா.ஜ.க. வின் இந்த கொல்லைப்புற செயல்பாடு ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலாகவே இருந்து வந்தது.

புதுச்சேரியும் இதுபோன்ற தொல்லையை தொடர்ந்து அனுபவித்து வருகிறது. இந்தநிலையில் டெல்லி முதல்-மந்திரி தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் நிர்வாக அதிகாரம் உள்ளது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது.

அலங்கார பதவி

சுப்ரீம் கோர்ட்டின் இந்த சிறப்புமிக்க தீர்ப்பினால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை புதுவை கவர்னரும் மதித்து நடக்கவேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை முடக்க கவர்னர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. அலங்கார பதவியை அதிகார பதவியாக கவர்னர்கள் நினைக்கக்கூடாது. தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிகாரம் என்பதை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உறுதி செய்துள்ளது என்றார்.

அன்பழகன்

கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கூறுகையில் 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். புதுவையில் கடந்த கால காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு சரியான திட்டமிடுதல் இல்லாமல் நீதிமன்றம் சென்று அவசர கோலத்தில் தீர்ப்பு பெற்று கவர்னருக்கு அதிகாரத்தை வழங்கினார்கள்.

ஆனால் இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் கவர்னர் மற்றும் தலைமை செயலாளர், அரசு செயலாளர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். மக்கள் நலன்கருதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றை நடைமுறைப்படுத்த கவர்னர், அரசு செயலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.


Next Story