அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவது தொடர்பாக ரங்கசாமி ஆலோசனை

காரைக்கால் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி
காரைக்கால் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அவருக்கு மாதிரி வரைபடத்துடன் விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசு மருத்துவக்கல்லூரி
புதுவை கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியை மருத்துவ பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இதேபோல் காரைக்காலில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்படும் என்றும் தெரிவித்தார். இந்த மருத்துவக்கல்லூரியை திருநள்ளாறு பகுதியில் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மாதிரி வரைபடம்
அதன்படி புதிய மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய கட்டிடங்கள் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் பி.எஸ்.ராவ் தலைமையிலான குழுவினர் காரைக்காலில் கட்டப்பட உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி தொடர்பாக மாதிரி வரைபடத்தை தயாரித்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்று அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து புதிய மாதிரி வரைபடம் தொடர்பாக விளக்கம் அளித்தனர். முதல்-அமைச்சரின் சந்தேகங்கள் தொடர்பாகவும் அவர்கள் விரிவாக பதில் அளித்தனர்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்
அப்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை செயலாளர் உதய குமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அவர்களுடன் புதிய மருத்துவக்கல்லூரி தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.