சாலைகளில் வேகத்தடைகள் அகற்றம்


சாலைகளில் வேகத்தடைகள் அகற்றம்
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி புதுவை நகரப்பகுதியை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் அகற்றும் பணியும் நடக்கிறது.

புதுச்சேரி

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி புதுவை நகரப்பகுதியை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் அகற்றும் பணியும் நடக்கிறது.

ஜனாதிபதி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் அரசுமுறை பயணமாக வருகிற 7-ந்தேதி புதுச்சேரி வருகிறார். அன்றையதினம் 11 மணிக்கு ஜிப்மர் கலையரங்கத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மேலும் முருங்கப்பாக்கத்தில் உள்ள கைவினை கிராமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். தொடர்ந்து சமீபத்தில் புஷ்கரணி விழா நடந்த திருக்காஞ்சியில் உள்ள கங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். அதன்பின் சங்கராபரணி ஆற்றில் நடைபெறும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அழகுபடுத்தும் பணி

அன்றைய தினம் இரவு புதுவை கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் தங்கும் விடுதியில் தங்குகிறார். 8-ந்தேதி அவர் புதுவையிலிருந்து புறப்பட்டு ஆரோவில் செல்கிறார். அங்கு நடைபெறும் அரவிந்தரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி புதுவை நகர சாலைகள் புதுப்பொலிவு பெற தொடங்கியுள்ளது. ஜனாதிபதி செல்லும் வழியெங்கும் சாலைகள் அழகுப்படுத்தப்படுகின்றன. சாலையின் நடுவே சென்டர் மீடியனில் உள்ள செடிகள் வெட்டி அழகுபடுத்தப்படுகிறது.

வேகத்தடைகள் அகற்றம்

அதற்கு வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது. சாலையோர சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் கிழித்து அப்புறப்படுத்தப்படுகிறது. மேலும் கடலூர் சாலையில் வெங்கடாசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து முதலியார் பேட்டை வரை 7 இடங்களில் அமைந்துள்ள வேகத்தடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இன்று அகற்றப்பட்டன.

இதுபோல காமராஜர் சாலையிலும் வேகத்தடைகள் அகற்றப்பட்டது. ஆங்காங்கே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

திருக்காஞ்சி கோவில்

ஜனாதிபதி வருகையையொட்டி திருக்காஞ்சி கங்கவராகநதீஸ்வரர் கோவில் மற்றும் சங்கராபரணி ஆற்றங்கரையில் பொதுப்பணித்துறை, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கோவிலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் பாதையில் மணல் மூட்டைகள் கொண்டு அரண்போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி சுத்தப்படுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிமெண்டு தடுப்புகள்

இதேபோல் நோணாங்குப்பம், இடையார்பாளையம், தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பிரதிபலிப்பு தடுப்பான்கள் அகற்றப்பட்டுள்ளன. அந்த இடங்களில் சிமெண்டு தடுப்புகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story