குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 உதவித்திட்டம் நிறுத்தம்


குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 உதவித்திட்டம் நிறுத்தம்
x

புதுவையில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அந்த திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி

குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அந்த திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு மாதம் மட்டுமே..

புதுச்சேரி மாநிலத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். திட்டம் தொடங்கப்பட்ட பின்னர், கடந்த ஜனவரி மாதம் மட்டுமே குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 2 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓய்வூதியம் நிறுத்தம்

புதுச்சேரி மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க சாதி வாரியாக கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, இந்த அரசு அறிவித்த திட்டங்களையும், அறிவிக்காத பல திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.

புதுச்சேரியில் ஓய்வூதியம் பெற புதிதாக தேர்வு செய்யப்பட்ட முதியோருக்கு ஒரு மாதத்துக்கு பிறகு ஓய்வூதியம் தரவில்லை. சுமார் 35 ஆயிரம் பேருக்கு 2 மாதங்களாக ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த பல திட்டங்கள் செயல்படுத்தவில்லை.

சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி, ரொட்டிபால் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரம், பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு என பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. ரங்கசாமி அறிவித்த 95 சதவீத திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ரூ.1,000 வழங்கும் திட்டம் நிறுத்தம்

இதுபோல குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு முதல் மாதம் தொகை மட்டுமே தரப்பட்டது. ஆனால், அதற்கான கோப்பு 2-வது மாதம் தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அவர் நிராகரித்துள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கான நிதியுதவி திட்டத்துக்கு விண்ணப்பத்தில் எம்.எல்.ஏ. கையொப்பம் இருந்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளனர். சரியான ஆதாரம் இல்லாமல் எம்.எல்.ஏ. கையெழுத்து மட்டும் வைத்து இந்த தொகையை தர முடியுமா? என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.

அதிகாரிகள் மீது பழி

புதுச்சேரி அரசால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒரு திட்டத்தை கூட நிறைவேற்ற முடியாது. இது தொடர்பான கோப்பை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் திருப்பி அனுப்பி விட்டனர் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகள் மீது பழிபோடுவார்.

8 மணி நேர வேலை என்பது தொழிலாளர் உரிமை. 12 மணி நேர பணி தொடர்பான அறிவிப்பை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story