விவசாயிடம் ரூ.50½ லட்சம் நூதன மோசடி

வில்லியனூரில் விவசாயிடம் ரூ.50½ லட்சம் நூதன மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லியனூர்
வில்லியனூரில் விவசாயிடம் ரூ.50½ லட்சம் நூதன மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நிதி நிறுவனத்தில் கடன்
வில்லியனூர் காமராஜ் சாலை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அப்பாவு (வயது 62). விவசாயி. இவரது மகன் பரணிதரன் (37). குளிர்பான வினியோகஸ்தர். இவர் தொழிலுக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.58 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதற்கான ஏற்பாட்டை அப்பாவு செய்திருந்தார்.
கொரோனா காலகட்டத்தில் தொழில் சரியாக நடக்காததால், கடனுக்கான தவணை தொகையை பரணிதரன் முறையாக செலுத்தவில்லை. இதனால் தனியார் நிதி நிறுவனம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ரூ.50½ லட்சம் மோசடி
இந்தநிலையில் கடனை திருப்பி செலுத்த தான் உதவுவதாக அவரது நண்பர் விழுப்புரம் மாவட்டம் பெரியபாபு சமுத்திரத்தை சேர்ந்த மயிலாசலம் என்பவர் கூறினார். அவர், கடலூர் மாவட்டம் புத்தூரை சேர்ந்த மற்றொரு நிதிநிறுவன ஊழியரான ரமேஷ்குமாரை அப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர், கடனை பேசி அடைத்து விடுவதாகவும், தவணை முறையில் கடனை தொகையை செலுத்தினால் போதுமென கூறியுள்ளார்.
இதை நம்பி கடந்த 2020-ம் ஆண்டு ரூ.20 லட்சம், ரூ.5 லட்சம், 4 லட்சம் என பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.50 லட்சத்து 45 ஆயிரத்தை ரமேஷ்குமாரின் வங்கி கணக்குக்கு அப்பாவு அனுப்பி வைத்தார்.
2 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் இருந்து அப்பாவுக்கு வீடு ஜப்தி செய்ய நோட்டீஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பாவு, ரமேஷ்குமார், மயிலாசலத்தை தொடர்பு கொண்டு, தான் கொடுத்த பணம் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சரியாக பதில் கூறவில்லை. இதனால் தான் மோடிச செய்யப்பட்டதை அறிந்த அப்பாவு, வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலய்யன் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமார், மயிலாசலம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.