போலி பத்திர பதிவு மூலம் ரூ.1,000 கோடி நிலம் அபகரிப்பு


போலி பத்திர பதிவு மூலம் ரூ.1,000 கோடி நிலம் அபகரிப்பு
x

போலி பத்திர பதிவு மூலம் ரூ.1,000 கோடிக்கான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி

போலி பத்திர பதிவு மூலம் ரூ.1,000 கோடிக்கான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி கூறினார்.

சாதி வாரி கணக்கெடுப்பு

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. அதன்படி அவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ., அமலாக்கதுறை, வருமானவரித்துறை மூலமாக சோதனை நடத்தி பொய் வழக்கு போட்டு மிரட்டி வருகிறார்கள்.

புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதாக சொல்லும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி கல்வி, வேலைவாய்ப்பில் விகிதாசார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சென்டாக் குளறுபடி

சென்டாக்கில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் குளறுபடி நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சென்டாக் தலைவர், செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோர் கண்காணித்து மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். குப்பை வாருவதில் டெண்டர் விடுவதில் ரூ.60 கோடி ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவின்படி நிலத்தை மீட்டு கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணை

பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் அலுவலகத்தில் தொடர்பு இல்லாத நபர்கள் போலி உயில் சாசனத்தை இணைத்து ஊழல் செய்துள்ளனர். போலி பத்திர பதிவு மூலம் ரூ.1,000 கோடி நிலம் அபகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சப்-கலெக்டர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உழவர்கரை பதிவாளர் அலுவலகத்தில் 29 போலி பத்திர பதிவுகளும், பாகூரில் 3 போலி பதிவுகளும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

உழவர்கரை, வில்லியனூர், பாகூர் பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. மக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. மோசமான ஆட்சி நடக்கிறது. இந்த போலி உயில் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டி முடிந்தவுடன் உழவர்கரை சார் பதிவாளர் துறை அலுவலகத்தில் உயில் மாற்றம் செய்யும் வீடியோ ஆதாரத்தையும் நாராயணசாமி வெளியிட்டார்.


Next Story