புதுச்சேரியில் கடல் சீற்றத்தால் மணல் அரிப்பு


புதுச்சேரியில் கடல் சீற்றத்தால் மணல் அரிப்பு
x

புதுவையில் இன்று வழக்கத்துக்கு மாறாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரையோரம் மணல் அரிப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

புதுவையில் இன்று வழக்கத்துக்கு மாறாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரையோரம் மணல் அரிப்பு ஏற்பட்டது.

கடல் சீற்றம்

புதுவை பகுதிகளில் கடல் நீரோட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கடற்கரை பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஞ்ஞானிகள் குழுவினர் புதுவை வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர்.

இந்தநிலையில் இன்றும் புதுவை கடல் பகுதியில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கடற்கரையில் ஏற்கனவே உருவாகி இருந்த செயற்கை மணல் பரப்புகள் காணாமல் போயிருந்தன.

புதுவையையொட்டிய கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி இருந்தனர். வலைகளையும் பாதுகாப்புடன் வைத்தனர்.

அலையின் சீற்றம் காரணமாக புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தயங்கினார்கள். இருந்தபோதிலும் சிலர் கடலுக்குள் இறங்கி பயமின்றி குளித்தனர்.

மீனவ கிராமம்

காலாப்பட்டு அருகே உள்ள கனக செட்டிகுளம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதலே அங்கு கடல் சீற்றம் அதிகரித்தது. திடீரென அலைகள் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து எழுந்தன.

மீனவர்களால் மேடான பகுதிகளில் படகுகள் நிறுத்தப்பட்ட இடம், வலைகள் உலர வைத்த இடங்களில் கடல் நீர் புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனே அங்கிருந்து படகு, வலை மற்றும் என்ஜின் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.

இதேபோல் பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி ஆகிய மீனவ கிராமங்களின் கடலோர பகுதிகளிலும் கடல் சீற்றம் காரணமாக அலைகள் சீறிப்பாய்ந்ததால் கடற்கரைகளில் மண் அரிப்பால் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.


Next Story