மாமியாருக்கு அரிவாள் வெட்டு

நெடுங்காடு அருகே நகை அடமானம் வைத்த தகராறில் மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகளை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
நகை அடமானம் வைத்த தகராறில் மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகளை போலீசார் கைது செய்தனர்.
தங்க நகைகள்
நெடுங்காடு அருகே உசுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 80). வாய் பேசமுடியாத தனது மகள் காந்திமதியுடன் வசித்து வருகிறார். அவரது மகன் மணிமாறன், திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் முனியம்மாள் தனது கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட தங்க நகைகளை மகன் மணிமாறனிடம் கொடுத்து வைத்து இருந்ததாக தெரிகிறது. அந்த நகைகளை திருப்பிக் கேட்ட போது மணிமாறனின் மனைவி மஞ்சுளா அந்த நகைகள் அடமானத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அடமான சீட்டை கொடுத்தால் திருப்பிக் கொள்வதாக முனியம்மாள் கூறியுள்ளார்.
அரிவாள் வெட்டு
இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சுளா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து முனியம்மாளின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்ததால் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுளாவை கைது செய்தனர். அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.