சமூக அமைப்புகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

புதுவையில் நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி புறக்கணித்ததை கண்டித்து சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி புறக்கணித்ததை கண்டித்து சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்புக்கொடி
நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் விழாவினை புறக்கணித்தன. ஜனாதிபதியை மத்திய அரசு புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
அதன்படி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் கூட்டமைப்பு துணைத்தலைவர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாணவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சாமிநாதன் தொடங்கிவைத்தார்.
தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவரதன், ம.தி.மு.க. பொறுப்பாளர் கபிரியேல், தமிழர்களம் செயலாளா் அழகர், பெரியார் சிந்தனையாளர் இயக்க தலைவர் தீனா உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலா் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் கருப்புக்கொடியை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோல் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு சார்பில் சுதேசிமில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நீலகங்காதரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.