அரசு பள்ளிக்கு செல்லும் பாதையை முள்வேலி அமைத்து மூடியதால் மாணவர்கள் தவிப்பு


அரசு பள்ளிக்கு செல்லும் பாதையை முள்வேலி அமைத்து மூடியதால் மாணவர்கள் தவிப்பு
x

பாகூர் அருகே அரசு பள்ளிக்கு செல்லும் பாதையை முள்வேலி அமைத்து மூடியதால் வகுப்புக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர்.

பாகூர்

பாகூர் அருகே அரசு பள்ளிக்கு செல்லும் பாதையை முள்வேலி அமைத்து மூடியதால் வகுப்புக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி

ஏம்பலம் தொகுதி சேலியமேடு கிராமத்தில் கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சேலியமேடு, சேலியமேடுபேட், அரங்கனூர், குடியிருப்பு பாளையம், ஆதிங்கப்பட்டு, பின்னாச்சிக்குப்பம், சார்காசிமேடு, நிர்ணயப்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதில் வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்துக்கு அப்பகுதியில் உள்ள கோவில் அருகில் சுமார் 20 அடி அகலம் கொண்ட பாதையை மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

முள்வேலியால் அடைப்பு

இந்தநிலையில் இன்று காலை மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளிக்கு செல்லும் சாலையில் இரும்பு கம்பியால் முள்வேலி அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் இது பொதுபாதை அல்ல என்று எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அந்த வழியாக பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். ஒரு சில மாணவர்கள் இரும்பு முள்வேலிக்குள் புகுந்து பள்ளிக்கு சென்றனர். இதில் ஒரு சில மாணவர்களின் சட்டை சிக்கி கிழிந்ததாக தெரிகிறது. இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் விசாரணை

தகவல் அறிந்த பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, மாணவர்கள் செல்லும் பாதையை திடீரென்று மூடி வைத்தால் எப்படி பள்ளிக்கு செல்ல முடியும், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாதையைத்தான் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று முறையிட்டனர். இதையடுத்து மாணவர்கள் மாற்று பாதையில் பள்ளிக்கு சென்றனர்.

இதற்கிடையில் பாகூர் தாசில்தார் பாலகிருஷ்ணன், பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அதிகாரி தன செல்வம் நேரு ஆகியோர் அங்கு வந்து, வேலி அமைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரியிடம் பேசி முடிவு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story