காரைக்கால், நாகையில் திடீர் புகை மூட்டம்


காரைக்கால், நாகையில் திடீர் புகை மூட்டம்
x

காரைக்காலில் இரும்பு உருக்கும் ஆலையில் இருந்து வெளியேறிய புகையால் திடீரெனபுகை மூட்டம் ஏற்பட்டது.

காரைக்கால்

இரும்பு உருக்கும் ஆலையில் இருந்து வெளியேறிய புகையால் காரைக்கால், நாகை மாவட்டத்தில் திடீரெனபுகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

திடீர் புகை மூட்டம்

காரைக்கால் மாவட்டம் மேலவாஞ்சூர், கீழவாஞ்சூர், நிரவி, திரு-பட்டினம், கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென்று வானில் புகைமூட்டம் தென்பட்டது. காரைக்கால் அருகில் உள்ள நாகை மாவட்டம் நாகை, நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், திட்டச்சேரி, திருமருகல் வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த புகை மூட்டம் காணப்பட்டது.

அதிகாலையில் பெய்யும் பனி மூட்டம்போல், இந்த புகைமூட்டம் இருந்ததால் மக்கள் குழப்பம் அடைந்தனர். காற்றில் புகை கலந்ததால் நோயாளிகள், குழந்தைகள் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கடற்கரை பகுதியை ஒட்டிய பகுதியில் இருந்து புகைமூட்டம் வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இரும்பு தொழிற்சாலை புகை

இந்த தகவல் காரைக்கால், நாகை மாவட்ட கலெக்டருக்கு சென்றது. இதுபற்றி விசாரிக்க தீயணைப்பு துறைக்கு உத்தரவிட்டப்பட்டது. தீயணைப்பு துறையினர் நடத்திய விசாரணையில், காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் உள்ள பழைய இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய புகையால் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காற்று சுழற்சி இல்லாததால் நாகை, காரைக்கால் மாவட்டங்களில் பனி போல் புகை சூழ்ந்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து தொழிற்சாலையில் இரும்பு உருக்கும் பணியை உடனடியாக நிறுத்த காரைக்கால் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் இரும்பு உருக்கும் பணி நிறுத்தப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து புகை வந்து கொண்டே இருந்தது.

அச்சப்பட தேவையில்லை

இந்த புகைமூட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என காரைக்கால் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். வானில் திடீரென்று புகைமூட்டம் உண்டானது காரைக்கால், நாகை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story