மாற்றுப்பாதையில் வந்த லாரிநுழைவுவாயில் வளைவில் சிக்கியது


மாற்றுப்பாதையில் வந்த லாரிநுழைவுவாயில் வளைவில் சிக்கியது
x

திருபுவனை- கடலூர் சாலை துண்டிக்கப்பட்டதால் மாற்று வழியில் வந்த லாரி நுழைவு வாயில் வளைவில் மோதி விபத்துக்குள்ளானதால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.

திருபுவனை

திருபுவனை- கடலூர் சாலை துண்டிக்கப்பட்டதால் மாற்று வழியில் வந்த லாரி நுழைவு வாயில் வளைவில் மோதி விபத்துக்குள்ளானதால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.

திருபுவனை-கடலூர் சாலை துண்டிப்பு

திருபுவனை பகுதியில் விழுப்புரம்-நாகை நான்கு வழி சாலைக்கான சிமெண்டு சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. கிராமப் புறங்களை இணைக்கும் திருபுவனை தற்போது முக்கிய இடமாக திகழ்ந்து வருகின்றது. அதிகப்படியான தொழிற்சாலைக்கு வரும் தொழிலாளர்கள், வாகனங்கள் பயன்படுத்தப்படும் சாலையாக உள்ளது.

தற்போது திருபுவனையில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு வார காலத்திற்கு, தானியங்கி எந்திரங்கள் மூலம் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி அங்கு நடைபெற உள்ளது. இதற்காக அந்த சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதையில் போக்குவரத்து

திருபுவனையில் இருந்து மதகடிப்பட்டுபாளையம், பள்ளியநேலியனூர், மண்டகப்பட்டு வழியாக கடலூர் செல்லும் முக்கிய சாலையாகவும், திருபுவனை சன்னியாசிக்குப்பம் வழியாக திண்டிவனம் வரை செல்லும் முக்கிய கிராமப்புற சாலைகள் சந்திக்கும் பகுதியாகவும் உள்ளது. இந்தநிலையில் தற்போது சிமெண்டு சாலை அமைப்பதற்காக போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் வாகனங்கள் 3 பக்கமும் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் கிராமப்புற சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

நுழைவு வாயில் வளைவில் மோதிய லாரி

இந்தநிலையில் இன்று கடலூரில் இருந்து திருபுவனை பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க்கில் உள்ள தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனிக்கு எரிபொருட்களை ஏற்றி வந்த ஒரு லாரி மதகடிப்பட்டுபாளையம் பாலாஜி கார்டன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நுழைவு வாயில் வழியாக கடக்க முயன்றது.

அப்போது லாரியில் சரக்கு வைக்கப்பட்டு உயரமாக இருந்த பகுதி மோதியதால் நுழைவு வாயில் சுவர் (ஆர்ச்) சேதமடைந்தது. இதனால் லாரியை அப்படியே நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கிச் சென்று விட்டார்.

லாரி விபத்துக்குள்ளான பகுதியில் 2 மின் கம்பங்கள் அருகில் இருந்ததால் அதன் அருகே செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும் மின்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பங்கள் சேதமடையாமல் லாரியை கிரேன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கடலூர் சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரே மாற்றுப்பாதையாக இருந்த நிலையில் நுழைவு வாயிலை உடைத்துக் கொண்டு லாரி நின்றதால், வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் லாரி அப்புறப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சீரானது.

இருப்பினும் துண்டிக்கப்பட்ட கடலூர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story