விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரம்


விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரம்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் களிமண்ணால் ஆன சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

புதுச்சேரி

விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண்ணால் ஆன சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

புதுவை மற்றும் தமிழகத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அப்போது பக்தர்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். அதன்பின் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில் விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் பல இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. புதுவை பாப்பாஞ்சாவடியில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

களிமண் சிலைகள்

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது பொதுமக்களும் ஆர்வமுடன் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது. தற்போது களிமண்ணை கொண்டு சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது.

இந்த சிலைகள் காய்ந்த பின்னர் வர்ணம் பூசப்படும். இந்த ஆண்டு அரை அடி முதல் 2 அடி வரை சிறிய அளவிலான சிலைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ராஜ விநாயகர், ரத விநாயகர், தாமரை விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.

வெளியூர்களுக்கு அனுப்ப ஏற்பாடு

இந்த ஆண்டு விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலும் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டமிட்டு இயற்கையான வண்ணங்கள் தீட்டப்பட்டு சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன.

விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு சென்னை, கோயம்புத்தூர், சேலம், மயிலாடுதுறை, வேலூர் ஆகிய ஊர்களுக்கு சிலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.


Next Story