கல்லூரி மாணவரை கைது செய்ததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை


கல்லூரி மாணவரை கைது செய்ததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை
x

போலீஸ் மீது புகார் அளிக்க வந்த கல்லூரி மாணவரை கைது செய்ததை கண்டித்து அவரது உறவினர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியாங்குப்பம்

போலீஸ் மீது புகார் அளிக்க வந்த கல்லூரி மாணவரை கைது செய்ததை கண்டித்து அவரது உறவினர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவர்

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் புது காலனியை சேர்ந்த அய்யனாரப்பன் மகன் சரண் (வயது 20). இவர் லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று இரவு அரியாங்குப்பம் சென்று விட்டு, தனது மோட்டார் சைக்கிளில் சரண் வீடு திரும்பினார். நோணாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை வழிமறித்து விசாரணை நடத்தியதுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சரணை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது சட்டை கிழிந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

தாக்கிய போலீசார்

அங்கிருந்த போலீசாரிடம் ரோந்து போலீசார் தன்னை தாக்கியதாக நடவடிக்கை எடுக்க கோரி சரண் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த போலீசார் அவரை அடித்ததுடன் மோட்டார் சைக்கிள் சாவி, செல்போனை பறித்துக் கொண்டனர்.

இதுபற்றி தெரியவந்ததையடுத்து சரணின் தந்தை அய்யனாராப்பன் அங்கு சென்று கேட்டுள்ளார். அவரிடம் விரைவில் அனுப்பி வைப்பதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் நள்ளிரவுக்கு பிறகும் விடவில்லை.

இந்தநிலையில் அவசர அவசரமாக மாணவர் சரண் மீது போலீசை பணி செய்யவிடாமல் தடுத்து பிரச்சினை செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சரணை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டனர்.

போலீஸ் வாகனம் முற்றுகை

இதுபற்றி அறிந்த சரணின் உறவினர்கள் இன்று காலை அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து சரண் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் வாகனத்தில் போலீசார் ஏற்றினர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் போலீஸ் நிலையம் எதிரே புதுச்சேரி -கடலூர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். சில பெண்கள், சரணை விடுவிக்கக்கோரி சாலையில் படுத்து உருண்டனர். ஒரு தலைப்பட்சமாக போலீசார் செயல்படுவதாகவும், சாதியை கூறி இழிவுபடுத்தியதாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து கலைந்துபோக செய்தனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து சரணை மாற்றுப்பாதையில் போலீசார் அழைத்துச்சென்று, புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். போலீஸ் மீதே புகார் தெரிவிப்பதா? என்ற ஆத்திரத்தில் போலீசார் கல்லூரி மாணவரை தாக்கி கைது செய்த சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story