கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டல்


கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டல்
x

புதுச்சேரியில் இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவிக்கு மிரட்டல்

புதுச்சேரியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 19 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் படித்து வந்தார். இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இயங்கும் அவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். தனது அழகிய பேச்சால் மாணவியை மசியவைக்க திட்டம் போட்டார்.

தொடர்ந்து ஒரு வாரமாக பேசிய நிலையில் திடீரென அந்த வாலிபர் மாணவியையும், அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தான் சொல்வதை கேட்காவிட்டால் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்திலும், உறவினர்களுக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்.

எச்சரிக்கை

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் கூறுகையில், நடப்பாண்டில் பெண்களுக்கு எதிரான 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலம் குற்றங்கள் செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிச்சயம் போலீசாரால் கைது செய்யப்படுவார்கள். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்' என்றார்.


Next Story