லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தை மேல்நிலை எழுத்தர்கள் முற்றுகை


லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தை மேல்நிலை எழுத்தர்கள் முற்றுகை
x

புதுவையில் உதவியாளர் பணிக்கு தேர்வு நடத்தும் விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தை மேல்நிலை எழுத்தர்கள் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி

உதவியாளர் பணிக்கு தேர்வு நடத்தும் விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தை மேல்நிலை எழுத்தர்கள் முற்றுகையிட்டனர்.

போட்டித்தேர்வு

புதுவை அரசுத்துறைகளில் சுமார் 600 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே துறை ரீதியிலான போட்டித்தேர்வு நடத்தி நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை எழுத்தர்கள் விடுப்பு எடுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

இந்தநிலையில் ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மேல்நிலை எழுத்தர்கள் முத்தியால்பேட்டையில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்ஸ்பெக்டர் தியாகராஜனிடம் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிமாநிலத்தவரும்...

புதுவையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு நியமன விதி உருவாக்கப்பட்டது. இந்த விதியில் உதவியாளர் பணிக்கு வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனை நீக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்த நியமன விதியை தொடர்ந்தால் மண்ணின் மைந்தர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் செயல்பட்டு வருகின்றனர். முதல்-அமைச்சரும் அதனை மாற்ற அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் அதை கவனத்தில் கொள்ளவில்லை.

உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் கோச்சிங் சென்டர் வைத்து நடத்தி வருகின்றனர். இதன் மூலம் கணிசமான வருமானத்தையும் அவர்கள் ஈட்டுகின்றனர். அவர்கள் இப்போது படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story