வள்ளலார் சாலையில் 5 நாட்கள் போக்குவரத்துக்கு தடை

வாய்க்கால் பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் 5 நாட்களுக்கு வள்ளலார் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
புதுச்சேரி
புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம் வள்ளலார் சாலை ஜீவா நகர் அருகில் வாய்க்கால் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை 5 நாட்கள் வள்ளலார் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
அதன்படி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வள்ளலார் சாலை 45 அடி ரோடு வழியாக புதுச்சேரிக்கு வரும் அனைத்து வாகனங்களும் அஜந்தா சிக்னலில் இருந்து சர்தார் வல்பாய் பட்டேல் சாலை, செஞ்சி சாலை, சோனாம்பாளையம், பழைய பஸ் நிலையம் வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். புதுச்சேரியில் இருந்து வள்ளலார் சாலை 45 அடி ரோடு வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் வழியாக நெல்லித்தோப்பு, இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம் வழியாக செல்ல வேண்டும்.
இது பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கும் பொருந்தும். இதை பின்பற்றி போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






