கிராமப்புற சாலைகளில் போக்குவரத்து நெரிசல்


கிராமப்புற சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
x

விழுப்புரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை பணியால் மாற்றுப்பாதையான திருபுவனை கிராமப்புற சாலைகள் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

திருபுவனை

விழுப்புரம் - புதுச்சேரி 4 வழிச்சாலை பணியால் மாற்றுப்பாதையான திருபுவனை கிராமப்புற சாலைகள் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

4 வழிச்சாலை பணி

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புதுச்சேரி வழியாக 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் கண்டமங்கலம் ரெயில்வே கேட், திருபுவனை, மதகடிப்பட்டு பகுதியில் ஒருவழிப் பாதையாக சாலைகள் மாற்றப்பட்டுள்ளன.

இதனால் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. இதில் இருந்து தப்பிக்க தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையாக கிராம சாலைகளை பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றன. இதனால் குறுகலான இந்த சாலைகளும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகிறது.

சேதமடைந்த சாலை

இன்று காலை விழுப்புரம் மார்க்கமாக வந்த வாகனங்கள் கண்டமங்கலத்தில் இருந்து மருதூர், மண்டகப்பட்டு, பள்ளியநேலியனூர் வழியாக மதகடிப்பட்டுபாளையம் - நல்லூர் சாலை வழியாக சென்றன. நேற்று பெய்த மழையால் சாலை சேதமடைந்து தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அந்த பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சரிசெய்து, வாகனங்கள் சிரமமின்றி செல்ல உதவினர்.

4 வழிச்சாலை பணியால் கிராம சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அந்த சாலைகள் மிகவும் மோசமாக மாறியுள்ளன. இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.


Next Story