புதிய மென்பொருளை பயன்படுத்த பயிற்சி

புதுவையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பிறப்பு மற்றும் இறப்பு பதிவு முறையை மேற்கொள்ள புதிய மென்பொருளை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி
இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பிறப்பு மற்றும் இறப்பு பதிவு முறையை வலியுறுத்தி வருகிறது. எனவே பதிவுசான்றிதழ் வழங்குதல் மற்றும் புள்ளிவிவர அட்டவணைகள் உருவாக்குதல் ஆகியவற்றில் ஒரே சீரான தன்மையை கொண்டு வரும் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளது.
இந்த மென்பொருள் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனித்த பதிவு எண்ணை வழங்கி ஒரே மாதிரியான சான்றிதழ்களை உருவாக்கி வழங்கிட வழிவகை செய்கிறது. மேலும் பொதுமக்கள் பதிவு பிரிவினை அணுக வேண்டிய அவசியமின்றி நிகழ்வு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் பிறப்பு, இறப்பு நிகழ்வை பதிவு செய்ய பொதுப்பதிவு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியுள்ளது.
இந்த மென்பொருளை பயன்படுத்தும் பயிற்சி கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க அறையில் இன்று நடந்தது. பயிற்சியை உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் தொடங்கிவைத்தார். இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், உள்ளாட்சித்துறை துணை இயக்குனர்கள் கார்த்திகேயன், சுரேஷ், மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை உதவி இயக்குனர் மற்றும் முதன்மை பயிற்றுநர் ஜெபாரதிராஜ், உள்ளாட்சித்துறை தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசகர் சிவானந்தம், புள்ளிவிவர அதிகாரி கிருஷ்ணராஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.