வேளாண் அறிவியல் நிலையத்தில் வீணாகும் காய்கறி, பழங்கள்


உரிய பராமரிப்பு இல்லாததால் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்கறி, பழங்கள் வீணாகி வருகின்றன.

புதுச்சேரி

உரிய பராமரிப்பு இல்லாததால் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்கறி, பழங்கள் வீணாகி வருகின்றன.

வேளாண் அறிவியல் நிலையம்

புதுவை குரும்பாபேட்டில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் உள்ளது. இந்த வேளாண் அறிவியல் நிலையம் கடந்த 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய விதை நெல் உற்பத்தி, காய்கறி சாகுபடியில் புதுமைகள் புகுத்துவது, ஆராய்ச்சி என பல்வேறு பணிகள் இங்கு நடைபெற்று வந்தது. இதற்காக 145 எக்டேர் நிலம் உள்ளது.

இங்கு முக்கனிகளான மா, பலா, வாழை தோப்புகளும் உள்ளன. எப்போதும் பசுமையாக காட்சியளித்த இந்த பண்ணை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

காய்கறிகள், பழங்கள் என்று விளைந்து பலன் கொடுத்த இந்த வேளாண் அறிவியல் நிலையம் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. பல ஏக்கர் நிலங்கள் எந்த வித பயிரும் சாகுபடி செய்யப்படாமல் வெறுமனவே காட்சியளிக்கிறது.

ஆண்டுதோறும் இங்கு விளையும் மா, பலா பழங்கள் போன்றவை குத்தகைக்கு விடப்படும். ஆனால் இந்த ஆண்டு குறைந்த தொகைக்கு கேட்டதால் குத்தகை விடப்படவில்லை.

வீணாகும் பழங்கள்

மேலும் தோப்புகள் சரியாக பராமரிக்கப்படாததால் பலாக்காய்கள் அழுகி தொங்குகின்றன. கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்களையும் முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் கருகி சருகாக காணப்படுகிறது. தோப்புக்குள் எங்கு சென்றாலும் இலை சருகுகளாக காட்சி அளிக்கிறது. அவற்றை ஊழியர்கள் அவ்வப்போது அள்ளி சென்று தீவைத்து கொளுத்துகின்றனர்.

பல நூறு ஊழியர்கள் இங்கு பணியாற்றினாலும் உரிய பராமரிப்பின்றி காடுபோல் வேளாண் அறிவியல் நிலையம் காணப்படுகிறது. இதனால் வேளாண்மை படிக்கும் மாணவ, மாணவிகள் எதையும் அறிந்துகொள்ள முடியாத நிலை நிலவுகிறது.

அழிவின் விளிம்பில்...

கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் சென்றுள்ளது. பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பயிற்சி பெற்ற இந்த வேளாண் அறிவியல் நிலையம் காக்கப்பட வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை புதுவை அரசு எடுக்கவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


Next Story