குப்பை கொட்டும் இடமாக மாறிய அலையாத்தி காடுகள்


குப்பை கொட்டும் இடமாக மாறிய அலையாத்தி காடுகள்
x

குப்பைகள் கொட்டும் இடமாக அலையாத்தி காடுகள் மாறி வருவதால் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்புக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கோட்டுச்சேரி

குப்பைகள் கொட்டும் இடமாக அலையாத்தி காடுகள் மாறி வருவதால் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்புக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அலையாத்தி காடுகள்

காரைக்கால் அரசலாறும், கடலும் இணையும் இடத்தில் பரந்து விரிந்த சதுப்புநிலம் காணப்படுகிறது. இந்த சதுப்பு நிலத்தில் சுனாமிக்குப் பிறகு ஆயிரக்கணக்கான அலையாத்தி செடிகள் நடப்பட்டன. புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை இந்த செடிகளை நட்டு, வளர்த்து, அபிவிருத்தி செய்தது. தற்போது இந்த அலையாத்தி காடுகள் பசுமையாக காட்சியளிக்கிறது.

கடலுக்கு மிக சமீபமாக இருக்கும் அலையாத்தி காடுகள் இருவகை சிறப்பை பெற்றிருக்கிறது. இயற்கையாகவே ஆற்றுநீர், மழை நீர் இந்த வனங்களை அழியாமல் பாதுகாக்கின்றன. இது தவிர கடலிலிருந்து அரசலாறு வழியாக காடுகளில் நுழையும் உவர் நீரும் இந்த காட்டை செழுமையாக வைத்திருக்கின்றன.

பறவைகள் படையெடுப்பு

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து அபூர்வ வகைப் பறவையினங்கள் இந்த காடுகளில் ஓய்வெடுக்கின்றன. சதுப்பு நிலத்தில் கிடைக்கிற மீன்கள், நத்தைகள், நண்டுகள், சிறு கிளிஞ்சல்களை உண்ணுகின்றன. இந்த காடுகளில் முட்டையிட்டு, குஞ்சுபொரிக்கின்றன. பின் குஞ்சுகளுடன் மீண்டும் சொந்த நாடுகளுக்கே திரும்பி செல்கின்றன.

பசுமையாக காட்சியளிக்கும் இந்த அலையாத்தி காடுகள் தற்போது பொலிவிழந்து வருகின்றன. தற்போதுள்ள சதுப்பு நிலக் காட்டுக்குள் கடற்கரைக்கு வருபவர்கள் வீசும் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் அரசலாற்றில் படகுகளை நிறுத்தும் மீனவர்கள் குளிர்பதனப்பெட்டி, தெர்மாக்கோல் பெட்டி, படகு கழிவுகளை இந்த காடுகளில் வீசி செல்கின்றனர்.

கழிவுகளை அகற்ற நடவடிக்கை

புதுச்சேரி அரசால் சுற்றுலா மற்றும் கடலுயிரின காட்சியக கனவோடு உருவாக்கப்பட்ட அலையாத்தி காடுகள் தற்போது பராமரிப்பின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு முதல் நவம்பர் வரை காரைக்கால் அலையாத்தி காட்டை கடக்க விருக்கும் வெளிநாட்டுப் பறவைகள் காரைக்காலில் இறங்கி ஓய்வெடுக்குமா? இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அலையாத்தி காடுகளில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், குப்பைகள், கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story