நாராயணசாமிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி

புதுவை காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் வெளிக்கிளம்பிய நிலையில் நாராயணசாமிக்கு எதிராக மேலிட பார்வையாளரிடம் நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரி
புதுவை காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் வெளிக்கிளம்பிய நிலையில் நாராயணசாமிக்கு எதிராக மேலிட பார்வையாளரிடம் நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.
கோஷ்டிபூசல்
புதுவை காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் ஓரணியாகவும், முன்னாள் அமைச்சர்களான கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
கட்சி கூட்டங்களில் கலந்துகொள்ளும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இந்தநிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் 42 பேர் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார்கள்.
மேலிட பார்வையாளருடன் சந்திப்பு
அதில், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியத்தை மாற்றவேண்டும், புதுவை அரசியல் விவகாரங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலையிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையில் அதிருப்தியாளர்கள் நேற்று பெங்களூருவில் மேலிட பார்வையாளரான தினேஷ் குண்டுராவை சந்தித்து பேசினார்கள். அப்போது சோனியாகாந்தி, ராகுல்காந்திக்கு அனுப்பிய கடிதங்களின் நகலையும் வழங்கினார்கள்.
அடுக்கடுக்கான புகார்
மேலும் அவரிடம், மக்கள் செல்வாக்குள்ள பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் தான் காரணம். புதுச்சேரியில் கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதுடன், மறு சீரமைப்பு செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலின் போது புதுச்சேரி தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுத்தரக் கூடாது என்று அடுக்கடுக்காக கோரிக்கைகளை வைத்தனர். நாராயணசாமிக்கு தேசிய அரசியலில் பங்கெடுக்கும் வகையில் பொறுப்பு கொடுப்பதுடன் அவர் புதுவை அரசியலில் தலையிட செய்ய கூடாது என்று வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் கேட்டுக் கொண்ட தினேஷ்குண்டுராவ் அவர்களை சமாதானப்படுத்தியதுடன் ராகுல்காந்தியை சந்திக்க புதுவை நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்வதாக உறுதி கூறினார்.
ஏற்கனவே நாராயணசாமிக்கு எதிராக கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில் மேலிட பார்வையாளரை சந்தித்து புகார்களை தெரிவித்து இருப்பதன் மூலம் நாராயணசாமிக்கு எதிராக மீண்டும் காங்கிரசார் போர்க்கொடி தூக்கி இருப்பதாகவே கட்சி வட்டாரத்தில் தெரிவித்தனர்.






