பெண்கள் பால்குட ஊர்வலம்


பெண்கள் பால்குட ஊர்வலம்
x

புதுவையில் ஆடி மாதத்தையொட்டி அம்மன்கோவில்களில் பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி

ஆடி மாதத்தையொட்டி புதுவை அம்மன்கோவில்களில் பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

ஆடி மாதம்

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன்கோவில்களில் திருவிழாக்கள், கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று பால்குட ஊர்வலங்களும் நடந்தது. புதுவை முருங்கப்பாக்கம் அங்காளபரமேஸ்வரி அம்மன்கோவிலில் இன்று அம்மனுக்கு பால் அபிசேகம் நடந்தது.

பால்குட ஊர்வலம்

முன்னதாக இன்று காலை முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் சுமந்தபடி மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். ஊர்வல முடிவில் பால் அபிசேகம் நடந்தது.

புதுவை நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன்கோவில் 40-ம் ஆண்டு செடல்விழா கடந்த 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவில் இன்று பால்குட ஊர்வலம் நடந்தது.

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவிலை அடைந்ததும் அங்கு பால் அபிசேகம் நடந்தது. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. வருகிற 21-ந்தேதி பிரசித்திபெற்ற செடல் உற்சவம் மற்றும் தேர்பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கலியுக பராசக்தி

புதுவை உருளையன்பேட்டை ஸ்ரீ கலியுக பராசக்தி அன்னை ஆலய 53-வது ஆண்டு ஆடி உற்சவ திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி கொடியேற்றப்பட்டு சக்தி கரக புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சாமிக்கு அபிசேகமும், ஆராதனையும் நடந்தது. நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.


Next Story