11 வயது சிறுமிக்கு 6 மாதமாக பாலியல் தொல்லை - சென்னையில் நேர்ந்த கொடூரம்


11 வயது சிறுமிக்கு 6 மாதமாக பாலியல் தொல்லை - சென்னையில் நேர்ந்த கொடூரம்
x
தினத்தந்தி 29 May 2024 6:57 AM IST (Updated: 29 May 2024 7:06 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை அழைத்து போலீசார் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவரது பெற்றோர்கள் குடிக்கு அடிமை ஆனதால் சிறுமி பராமரிப்பு இல்லாமல் வளர்ந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை டெய்லர் குமார் மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்கள் என 3 பேர் கடந்த 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமி திருவேற்காடு பகுதியில் வசிக்கும் தனது சித்தி வீட்டுக்கு சென்று, வயிறு வலிப்பதாகவும், பெரியப்பா மகன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறி அழுதுள்ளாள்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுமியை உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது சிறுமி 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் பாட்டி வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி சிறுமியை அழைத்து போலீசார் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சிறுமியிடம் முதலில் 16 வயதான பெரியப்பா மகன் தின்பண்டங்களை வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதை பார்த்த எதிர்வீட்டில் வசிக்கும் மற்றொரு 16 வயது சிறுவன் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதுபோல் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வரும் குமார் என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 6 மாதங்களாக வேதனைகளை அனுபவித்து வந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவிக்க முயன்றபோது அவர்கள் மதுபோதையில் கண்டுகொள்ளவில்லை என சிறுமி வேதனையுடன் கூறியுள்ளாள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுமியின் பெரியப்பா மகன், எதிர்வீட்டு சிறுவன், டெய்லர் குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story