ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் 1 லட்சத்து 2 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்


ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில்  1 லட்சத்து 2 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்
x
தினத்தந்தி 14 Oct 2025 9:59 AM IST (Updated: 14 Oct 2025 11:45 AM IST)
t-max-icont-min-icon

மக்களுடைய சுகாதாரத்தை பேணும் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த 19.07.2025 முதல் 11.10.2025 வரையிலான நாட்களில் 1 லட்சத்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலைகள், தெருக்கள், கடற்கரைகள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள், பூங்காக்கள், மயான பூமிகள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தினசரி சராசரியாக 6,500 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றி திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . மேலும், நாள்தோறும் சராசரியாக 1000 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இதில், ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5) திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6) ஆகிய இரண்டு மண்டலங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த 19.07.2025 முதல் 11.10.2025 வரையிலான நாட்களில் மண்டலம்-5ல் 62,224 மெட்ரிக் டன், மண்டலம்-6ல் 39478 மெட்ரிக் டன் என மொத்தம் 1. 02 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றி கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மண்டலம்-5 மற்றும் மண்டலம்-6ல் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக 800 மின்கல வாகனங்கள், குப்பைகள் சேகரிப்பதற்காக 5 டன் கொள்ளளவில் 9 டிப்பர் லாரிகள், 8 கனமீட்டர் கொள்ளளவில் 36 காம்பாக்டர் வாகனங்கள், 14 கனமீட்டர் கொள்ளளவில் 28 காம்பாக்டர் வாகனங்கள், 18 கனமீட்டர் கொள்ளளவில் 4 காம்பாக்டர் வாகனங்கள், 250 டாட்டா ஏஸ் வாகனங்கள், 12 கனரக வாகனங்கள், 6 ஜேசிபி இயந்திரங்கள் என மொத்தம் 1145 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு மண்டலங்களிலும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சுழற்சி முறையில் கண்காணித்திட உரிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களது கண்காணிப்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த இரண்டு மண்டலங்களிலும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டு மக்களுடைய சுகாதாரத்தை பேணும் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

1 More update

Next Story