மகளிர் விடியல் பயண திட்டத்தில் புதிதாக 5 வழித்தடங்களில் 10 பேருந்துகள்; அறிவிப்பு வெளியீடு

எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி 56ஏ என்ற வழித்தடம் எண் கொண்ட பேருந்து இயக்கப்படும்.
சென்னை,
தமிழக அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், மகளிர் விடியல் பயண திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வருகின்றனா்.
சமூக, பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் மற்றும் உயா்த்தும் நோக்கில் 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், மகளிர் விடியல் பயண திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘மகளிர் மட்டும் - PINK BUS’ இயக்கப்படும் வழித்தடங்களின் பட்டியலை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி 56ஏ என்ற வழித்தடம் எண் கொண்ட பேருந்து இயக்கப்படும்.
இதுதவிர, விவேகானந்தர் இல்லம் பகுதியில் இருந்து கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் பகுதிக்கும் (வழித்தடம் எண் 32பி), செங்குன்றம் பகுதியில் இருந்து வள்ளலார் நகர் பகுதிக்கும் (வழித்தடம் எண் 57), பெரும்பாக்கம் (டி.என்.யூ.எச்.டி.பி.) பகுதியில் இருந்து தீவுத்திடல் பகுதிக்கும் (வழித்தடம் எண் 102பி), கண்ணகிநகர் (டி.என்.யூ.எச்.டி.பி.) பகுதியில் இருந்து தீவுத்திடல் பகுதிக்கும் (வழித்தடம் எண் 102கே) பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு தடத்திலும் தலா 2 பேருந்துகள் என மொத்தமாக 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.






