காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை கைவிட வேண்டும் - செல்வப்பெருந்தகை

மொத்த காப்பீட்டுத்துறை சந்தையில் 74.6 சதவிகிதம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் பங்கு வகித்து வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நேரு பிரதமராக பொறுப்பேற்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு பல முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்தார். அதற்காக அவரை நவ இந்தியாவின் சிற்பி என்று மக்கள் பாராட்டினார்கள். அந்த வகையில் 1956-ம் ஆண்டு 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கி அவற்றை இணைத்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தை ரூபாய் 5 கோடி முதலீட்டில் உருவாக்கினார். கடந்த 69 ஆண்டுகளில் இந்திய மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட நிறுவனமாக அது வளர்ந்து பெருகியிருக்கிறது.

தற்போது ஆண்டுக்கு ஆண்டு 32 சதவிகித லாபத்தை அதிகரிக்கிற நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 2024-25ம் ஆண்டில் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் லாபம் ரூபாய் 10,053 கோடியாக உயர்ந்திருக்கிறது. பிரீமியம் மூலமாக மொத்த வருமானம் ரூபாய் 4 லட்சத்து 88,148 கோடியாக இருக்கிறது. ஆயுள் காப்பீட்டு கழகத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 56 லட்சம் கோடியை கடந்து பொதுத்துறை நிறுவனங்களிலேயே மிகப்பெரிய வலிமையான நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதனுடைய முழு உரிமை இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமாக உள்ளது.

இந்திய காப்பீட்டுத் துறையின் மொத்த வருமானம் ரூபாய் 8 லட்சத்து 81 ஆயிரத்து 434 கோடி. பாலிசி மொத்த மதிப்பு ரூபாய் 47 லட்சத்து 84 ஆயிரத்து 941 கோடி. அதேபோல, பாசிலிதாரர்களுக்கு செலுத்தப்பட்ட தொகை 4 லட்சத்து 16 ஆயிரத்து 354 கோடி ரூபாய். ஆனால், கடந்த 2000ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த தாராளமயமாக்கல் கொள்கையின் காரணமாக காப்பீட்டுத் துறையில் 23 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இன்றைக்கும் மொத்த காப்பீட்டுத்துறை சந்தையில் 74.6 சதவிகிதம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் முன்னணிப் பங்கு வகித்து வருகிறது. எல்.ஐ.சி. என்றாலே நம்பகத்தன்மையும், பாதுகாப்பும் கொண்டது என்று மக்கள் கருதி, அதில் முதலீடு செய்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கு ஆயுள் காப்பீட்டுத்துறை குறைந்த வட்டியில் பெருமளவில் நிதியுதவி செய்து வருகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் வகையில் இன்சூரன்ஸ் சட்டங்களை திருத்தும் மசோதா கொண்டு வரப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். தற்போதைய நிலையில் 74 சதவிகிதம் வரை அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டால் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு வாய்ப்பு ஏற்படுகிற நிலை ஏற்படும். இதன்மூலம் ஆயுள் காப்பீட்டுத்துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்படுவதோடு அன்னிய நிறுவனங்களுக்கு கதவை திறந்து விடப்படுவதன் மூலம் காப்பீட்டுத்துறை மீது மக்களின் நம்பகத்தன்மையை இழக்கிற நிலை ஏற்படும்.

காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டால் தற்போது ஆயுள் காப்பீட்டு கழகத்தில் மத்திய அரசின் கண்காணிப்பு இருப்பதைப் போல அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் செயல்படுகிற நிறுவனங்களை கண்காணிக்க முடியாது, அதனால் மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். எனவே, மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு போட்டியாக காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com