2026 பிப்ரவரிக்குள் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

2026 பிப்ரவரிக்குள் கோவில்களில் 5 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர் யூனியன் சார்பில் நடைபெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பின்னர், இந்த ஆட்சி ஆன்மிகத்திற்கும், இறையன்பர்களுக்கும் எதிரான ஆட்சி என்ற பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்தவர்களின் எண்ணங்களை அடித்து நொறுக்கி சுக்குநூறாக்கி, இந்த ஆட்சி எல்லோருக்குமான ஆட்சி என நிரூபித்து காட்டியவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர். இந்த ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா என்ற கொடிய தொற்றின் தாக்குதலிருந்து மக்களை காக்க அனைத்து அமைச்சர்களையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களை போல் பணியாற்ற வைத்து, கொரோனா தொற்று காலத்தில் நிவாரண உதவி வழங்குகின்ற கோப்பில் முதன்முதலில் கையெழுத்திட்டவர் நமது முதல்-அமைச்சர் ஆவார்.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கொரோனா காலத்தில் அர்ச்சர்களுக்கு உதவித்தொகையாக ரூ.4,000 மற்றும் ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்ற வரிகளுக்கேற்ப இந்த அரசு பொறுப்பேற்றபின் நியமிக்கப்பட்ட 46 ஓதுவார்களில் 12 பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியதாகும். இது தந்தை பெரியாரின் கனவு, அதை நனவாக்கிவார் வாழும் பெரியார் தமிழ்நாடு முதல்-மைச்சர் என்பதை கோடிட்டு காட்ட விரும்புகின்றேன்.
இந்த ஆன்மிக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் 3,707 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ரூ.8,000 கோடி மதிப்பிலான கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுள்ளோம். இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு இந்த ஆட்சியில் தான் ரூ.1,200 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கோவில் நிதியை அரசு பயன்படுத்திய நிலைமாறி, இந்த ஆட்சியில்தான் கோவில்களுக்கு அரசு நிதி இந்த அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் கோவில்களின் திருப்பணிக்கு உபயதாரர்கள் மட்டும் ரூ.1,502 கோடியை முன்வந்து அளித்துள்ளனர். இது இந்த ஆட்சியின் நேர்மைக்கும், செயல்திறனுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கோவில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றியவர்களை வரன்முறைப்படுத்த கடந்த ஆட்சியில் அறிவிப்பு செய்திருந்தாலும், அதனை செயல்படுத்தவில்லை. ஆனால் திராவிட மாடல் அரசின் நான்காண்டுகளில் 1,351 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 5 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றியுள்ள 1,500 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதனை முதல்-அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
இதுபோன்ற பல்வேறு பணியாளர்களின் மாநாடுகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் பட்டியல் போல் நீண்டு இருக்கும். இந்து சமய அறநிலையத்துறையில் பணியாளர்கள் மனநிறைவோடு இருக்கின்றார்கள் என்பதற்கு இம்மாநாட்டு குழுவினர் அளித்துள்ள 6 கோரிக்கைகளே சாட்சியாக அமைந்துள்ளது. உங்களது கோரிக்கைகளாக யூனியனுக்கு அலுவலகம், வீட்டு வாடகைப்படி உயர்வு, கோவில்களின் வருமானத்தில் 40 சதவீதம் சம்பள செலவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பொது நிதியாக ஏற்படுத்தி அதன்மூலம் கோவில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை துறை செயலாளர் மற்றும் ஆணையரிடம் கலந்து பேசி, முதல்-அமைச்சரின் மேலான கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு எட்டப்படும். கோவில் வருமானத்தில் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் விகிதம் 20 சதவீதம் என்று இருந்ததை இந்த அரசு பொறுப்பேற்றபின் அந்தந்த கோவில்களின் செலவினத்திற்கு ஏற்றாற்போல் 25 முதல் 35 சதவீதம் வரை உயர்த்தியுள்ளோம். எந்த ஒரு பணியாளரும் பணிக்கேற்ற ஊதியம் இல்லாமல் பணியாற்றமாட்டார்கள் என்ற உறுதியை வழங்குகின்றேன்.
பைபிளில் கூறப்பட்டுள்ள கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வரிகளுக்கேற்ப கேட்காமலே கொடுக்கின்ற மனம், கேட்டதெல்லாம் தருகின்ற குணம் கொண்ட முதல்-அமைச்சரின் ஆட்சியில் இறைவனும் மகிழ்ச்சியோடு இருப்பான், இறைவனுக்கு தொண்டு செய்யும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






