சென்னையில் காணாமல் போன 16 வயது சிறுமி ஓசூரில் மீட்பு - காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் தப்பியோட்டம்


சென்னையில் காணாமல் போன 16 வயது சிறுமி ஓசூரில் மீட்பு - காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் தப்பியோட்டம்
x

உணவு அருந்திவிட்டு கை கழுவச் செல்வதாக கூறி வெளியே சென்ற சிறுமி, அங்கிருந்து தப்பியோடினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையில், 16 வயது சிறுமி ஒருவர் தனியாக சுற்றித்திரிந்த நிலையில், அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியை ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது, சிறுமி சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், 10 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனது குறித்து அவரது தந்தை ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தந்தைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கொரட்டூர் போலீசார் சிறுமியின் தந்தையை அழைத்துக் கொண்டு ஓசூர் சென்றனர்.

இதனிடையே, ஓசூர் காவல் நிலையத்தில் உணவு அருந்திவிட்டு கை கழுவச் செல்வதாக கூறி வெளியே சென்ற சிறுமி, அங்கிருந்து தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். ஓசூர் பகுதி தமிழகத்தின் எல்லையில் அமைந்திருக்கும் சூழலில், சிறுமி அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் இருந்து சிறுமி தப்பியோடிய சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story