தங்க முதலீட்டு திட்டத்தின் மூலம் 21 கோவில்களுக்கு ரூ.17.76 கோடி வட்டி கிடைக்கிறது: அமைச்சர் சேகர்பாபு


தங்க முதலீட்டு திட்டத்தின் மூலம் 21 கோவில்களுக்கு ரூ.17.76 கோடி வட்டி கிடைக்கிறது: அமைச்சர் சேகர்பாபு
x

தங்க முதலீட்டு திட்டத்தின் மூலம் 21 கோவில்களுக்கு ரூ.17.76 கோடி வட்டி கிடைக்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில், காஞ்சி அருள்மிகு காமாட்சியம்மன் கோவில், குன்றத்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், திருவிடந்தை, அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் கோவில், திருமலைவையாவூர், அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் ஆகிய 4 திருக்கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 53 கிலோ 386 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்களை மும்பையிலுள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் செந்தில்குமாரிடம் அமைச்சர்கள் ஆர்.காந்தி, சேகர்பாபு ஆகியோர் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றபின், ஆன்மிகவாதிகளின் பொற்காலம் என போற்றும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய திருக்கோவில்களை கணக்கிட்டு இதுவரை 3,707 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

மன்னர்கள் மற்றும் நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷங்களாக திகழும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோவில்களை பாதுகாக்கின்ற வகையில் அவற்றை புனரமைக்க இதுவரை ரூ. 425 கோடியினை அரசு நிதியாக வழங்கியவர் நமது முதல்-அமைச்சர் ஆவார். அரசு நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதியின் மூலம் இதுவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 68 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றபின் 2021 - 22-ம் நிதியாண்டில் 112 அறிவிப்புகள், 2022 - 23-ம் நிதியாண்டில் 165 அறிவிப்புகள், 2023 - 24-ம் நிதியாண்டில் 249 அறிவிப்புகள், 2024 - 25-ம் நிதியாண்டில் 108 அறிவிப்புகள், 2025 - 26-ம் நிதியாண்டில் 210 அறிவிப்புகள் என இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு மொத்தம் 844 அறிவிப்புகளை வெளியிட்டு, அதில் 65 சதவீத அறிவிப்புகளை நிறைவேற்றி உள்ளோம்.

திருக்கோவில்களில் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறப்பட்டு பயன்படுத்த இயலாத பலமாற்று பொன் இனங்களில் கல், அரக்கு, அழுக்கு நீக்கப்பட்டு, மும்பையிலுள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்திடும் வகையில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திர பாபு மற்றும் செல்வி மாலா ஆகியோரின் கண்காணிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், 21 திருக்கோவில்களின் பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் அந்தந்த திருக்கோயிலின் பெயரில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டொன்றிற்கு 17 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது. இந்த வட்டித் தொகை அந்தந்த திருக்கோவிலின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மேலும், 13 திருக்கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பயன்பாடற்ற 378 கிலோ 619 கிராம் 100 மில்லிகிராம் பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்காலைக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளன. அவற்றில் இன்றைய தினம் காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சியம்மன் கோவிலிலிருந்து 42 கிலோ 326 கிராம், குன்றத்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 2 கிலோ 640 கிராம், திருவிடந்தை, அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் கோவிலிலிருந்து 4 கிலோ 070 கிராம், திருமலைவையாவூர், அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலிலிருந்து 4 கிலோ 350 கிராம் என மொத்தம் 53 கிலோ 386 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் இன்றைய தினம் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story