வெறிநாய்கள் கடித்து குதறியதில் 24 ஆடுகள் சாவு

காங்கயம் அருகே நள்ளிரவில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறின.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகே உள்ள வட்டமலைபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர், ஊதியூரில் மருந்து கடை நடத்தி வருகிறார். மேலும் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 90-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு இவர், வழக்கம் போல் பட்டிக்குள் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார். நள்ளிரவில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்தன. பின்னர் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறின. இதில் 16 பெரிய ஆடுகள், 8 குட்டிகள் உயிரிழந்தன.
இந்தநிலையில் நேற்று காலை சுப்பிரமணியம் பட்டிக்கு சென்றார். அங்கு ரத்தவெள்ளத்தில் ஆடுகள் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஊதியூர் போலீசாருக்கும், கால்நடை பராமரிப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், முதலிபாளையம் கால்நடை டாக்டர் அருள்நிதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
அப்போது பட்டியின் பக்கவாட்டில் உள்ளே சென்ற வெறிநாய்கள், ஆடுகளை கடித்து குதறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இறந்த ஆடுகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. ஊதியூர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






