சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

கோப்புப்படம்
17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 29). இவர், கடந்த 2023-ம் ஆண்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்தார். அங்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் வேலை செய்தார். இதையடுத்து அஜித்குமார், சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்தார்.
இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






