2-வது டெஸ்ட்: மீண்டும் களமிறங்கிய பண்ட்.. அரைசதம் விளாசி அசத்தல்

ரிஷப் பண்ட் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி பாதியில் வெளியேறினார்.
2-வது டெஸ்ட்: மீண்டும் களமிறங்கிய பண்ட்.. அரைசதம் விளாசி அசத்தல்
Published on

பெங்களூரு,

இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 47.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

அடுத்து 34 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ஏ அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 78 ரன்கள் அடித்திருந்தது. கே.எல். ராகுல் 26 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். ஆரம்பம் முதலே அடித்து ஆட முற்பட்ட ரிஷப் பண்ட், உடலில் பந்தால் அடி வாங்கினார். ஹெல்மெட், வலது கை, மணிக்கட்டு என தொடர்ச்சியாக உடலில் அடிவாங்கியதால் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதனையடுத்து துருவ் ஜூரெல் களமிறங்கினார். தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி மேற்கொண்டு 2 விக்கெட்டுகளை இழந்ததால் ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்கினார். களத்திற்கு வந்த அவர் தனது ஸ்டைலில் சிக்சரும் பவுண்டரியும் விளாசி 48 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய அவர் 65 ரன்களில் (54 பந்துகள்) கேட்ச் ஆனார். மறுமுனையில் துருவ் ஜூரெல் சதத்தை கடந்த நிலையில் 127 ரன்களில் களத்தில் உள்ளார். 89.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்தது. இதையடுத்து 417 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தபோது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com