ஒரே நாளில் 2-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு


ஒரே நாளில் 2-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 31 July 2025 5:52 PM IST (Updated: 31 July 2025 5:57 PM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சென்னை

உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்தபடியே அரசு அலுவல்களை கவனித்து வந்தார். உடல் நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். 10 நாட்களுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் வந்து தனது பணிகளை தொடங்கினார்.

இந்த நிலையில், இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறு பூங்காவில் நடைபயிற்சி செய்தபோது, அவரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நிலை குறித்து முதல்-அமைச்சரிடம் ஓ. பன்னீர்செல்வம் கேட்டறிந்ததாக கூறப்பட்டது.

பின்னர் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தி.மு.க.வை வீழ்த்துவது எங்கள் இலக்கல்ல என்று கூறினார்.

இந்த நிலையில் ஒரே நாளில் 2-வது முறையாக தற்போது முதல்-அமைச்சரை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வருகை தந்த ஓ. பன்னீர்செல்வம் முதல்-அமைச்சரை சந்தித்து பேசி வருகிறார். ஓ. பன்னீர்செல்வத்துடன் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றுள்ளனர்.

ஏற்கனவே காலையில் பூங்காவில் நடைபயிற்சியின்போது சந்தித்த நிலையில், மீண்டும் முதல்-அமைச்சரை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக இன்று காலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story