கரூரில் பெரும் துயரம்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு


தினத்தந்தி 27 Sept 2025 9:01 PM IST (Updated: 27 Sept 2025 11:36 PM IST)
t-max-icont-min-icon

விஜய்யின் பிரசார வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

கரூர்,

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி, 2-வது கட்டமாக ஒரு பெண், 3 குழந்தைகள் உட்பட 10 உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொடர்ந்து மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கரூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.

இதற்கிடையே, விஜய் பரப்புரை மேற்கொண்ட பகுதியில் கூடியிருந்தவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். கரூரில் நிலவு வரும் அசாதாரண சூழல் காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாலை கரூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story