40 ஆடியோ, 20 அந்தரங்க வீடியோ... சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த பெண் போலீஸ்

அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் தரவேண்டும் என மிரட்டினார்.
40 ஆடியோ, 20 அந்தரங்க வீடியோ... சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த பெண் போலீஸ்
Published on

கோவில்பட்டி,

தூத்துக்குடியை சேர்ந்த 35 வயது நபர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவோம் என கூறி அவருடைய குடும்பத்திற்கு, பெண் போலீஸ் ஒருவர் மிரட்டல் விடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், எனது கணவர் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ் பிரிவில் பெண் போலீஸ்காரர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து மாற்றுப்பணியாக சேர்ந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர், குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் போலீசும், ஒரு நிருபரும் சேர்ந்து எனது கணவரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி என் கணவருடன், பெண் போலீஸ் நெருங்கி பழகியுள்ளார். அவருடன் அந்தரங்கமாக பேசிய வாட்ஸ்-அப் வீடியோ, ஆடியோ, அழைப்புகளை செல்போனில் சேமித்து வைத்து பணம் கேட்டு மிரட்டினார். இந்த விவகாரத்தில், எனது கணவரும், பெண் போலீசும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 6-ந்தேதி பெண் போலீஸ், எனது கணவர் சம்பந்தப்பட்ட சில ஆடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். செப்டம்பர் 17-ந்தேதி சமாதான பேச்சுவார்த்தைக்கு வருமாறு என்னையும், உறவினர்களையும் வரவழைத்தார். தன்னிடம் 40-க்கும் மேற்பட்ட ஆடியோ, 20-க்கும் மேற்பட்ட வீடியோ இருப்பதாகவும், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் தரவேண்டும் எனவும் மிரட்டினார்.

எனவே பெண் போலீஸ், நிருபர் உள்ளிட்ட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் பெண் போலீஸ் மற்றும் நிருபர் உள்பட 5 பேர் மீது கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com