கல்லூரி பேராசிரியை வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை - போலீஸ் வலைவீச்சு


கல்லூரி பேராசிரியை வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை - போலீஸ் வலைவீச்சு
x

40 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு பழையபாளையம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. ஆடிட்டர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (வயது 70). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. துரைசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சுப்புலட்சுமியின் மகள் வெளிநாட்டில் உள்ளார். இதனால் சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்புலட்சுமி சாப்பிட்ட பின்னர் தன்னுடைய அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூங்கினார். அதன்பின்னர் நேற்று காலை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது வீட்டுக்குள் இருந்து பொருட்கள் சிதறிக்கிடந்தன.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி மற்ற அறைகளுக்கு சென்று அங்கு இருந்த 7 பீரோக்களையும் பார்த்தார். அவைகளும் உடைக்கப்பட்டு இருந்தன. பீரோக்களில் வைக்கப்பட்டு இருந்த 40 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பின்பக்க சுவர் வழியாக ஏறிக்குதித்து, பின்னர் மாடிக்கு சென்று அங்கிருந்து வீட்டின் முன்பக்கத்துக்கு வந்து கதவுகளையும், பீரோக்களையும் உடைத்து நகை-பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து 40 பவுன் நகை, ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சுப்புலட்சுமி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்படுவது இது 2-வது முறையாகும். கடந்த 2023-ம் ஆண்டு இதேபோல் அவரது வீட்டில் இருந்த 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story