ஓட்டலில் சாப்பிட்டதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

கோப்புப்படம்
தேனியில் ஓட்டலில் சாப்பிட்டதை தாய் கண்டித்ததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். லாரி டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியின் மகன் திலீப்குமார் (13 வயது). நாகலாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று இரவு டியூசன் முடிந்து திலீப்குமார் வீட்டுக்கு வந்தான். அப்போது குமார் வேலைக்கு சென்றுவிட்டதால் மகாலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
மகாலட்சுமியிடம் பிரைடு ரைஸ் சாப்பிட வேண்டும் என்று திலீப்குமார் கேட்டான். இதைத்தொடர்ந்து அவர் தனது மகனுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இரவு 9 மணி அளவில் மீண்டும் திலீப்குமார் வீட்டுக்கு வந்தான். அப்போது எதற்காக வீட்டில் சாப்பிடாமல் தினமும் வெளியில் சென்று சாப்பிடுகிறாய் என்று திலீப்குமாரை, மகாலட்சுமி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கவலை அடைந்த திலீப்குமார் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






