கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட்டு விட்டது... பின்னர் அறிவிப்போம் - பிரேமலதா சஸ்பென்ஸ்


கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட்டு விட்டது... பின்னர் அறிவிப்போம் - பிரேமலதா சஸ்பென்ஸ்
x
தினத்தந்தி 9 Jan 2026 10:05 PM IST (Updated: 9 Jan 2026 10:19 PM IST)
t-max-icont-min-icon

தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்று வருகிறது. இதற்காக 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கட்சி நிர்வாகிகள் வீர வாள், கிரீடம் மற்றும் சேவற்கொடியை பரிசாக வழங்கினர். பின்னர் மாநாட்டில் சிறப்புரையாற்றிய பிரேமலதா கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் எப்போதும் விஜயகாந்தின் கோட்டை. ரசிகர் மன்றமாக தொடங்கி இன்று தேமுதிகவாக மாறியுள்ளது நமது இயக்கம். தேமுதிக தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் கேப்டன் விஜயகாந்தை பார்க்கிறேன். அவரின்றி நாம் இல்லை. காசு கொடுக்காமல் தேமுதிக மாநாட்டிற்கு தொண்டர்கள் வந்துள்ளனர். இதற்கு இணை எந்த கட்சியும் இல்லை.

விஜயகாந்த் தேமுதிக அலுவலகத்தில் புதைக்கப்படவில்லை; அங்கு அவர் விதைக்கப்பட்டிருக்கிறார். நல்ல தலைவருக்கான இலக்கணம் விஜயகாந்த்; யாருக்கும் அஞ்சாத வீரர். வள்ளலாராக வாழ்ந்தவர் அவர். அடுத்த தலைமுறையை பற்றி சிந்தித்தவர்.

தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக ஆட்சியை தீர்மானிக்கும். தேமுதிக மக்களை நேசிக்கிற கட்சி. வெற்றி ஒன்றுதான் நமது கொள்கை. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அதை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. தேமுதிக மாவட்ட செயலாளர்களின் கருத்துளை படித்து அதன்படி கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. தேமுதிக தொண்டர்களை மதிப்பவர்களுடன் தான் கூட்டணி அமைக்கப்படும்.

தமிழகத்தில் எந்த கட்சியும் இதுவரை கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் இன்னும் கூட்டணியை அறிவிக்காத நிலையில் நாம் மட்டும் ஏன் முந்தி அறிவிக்க வேண்டும்? நாமும் கூட்டணியை பின்னர் அறிவிப்போம். சத்ரியனாக வாழ்ந்துவிட்டோம். இனி சாணக்யனாக வாழ்வோம். தை பிறந்தால் வழி பிறக்கும்; அவசரப்படும் கட்சியல்ல தேமுதிக. வெற்றி ஒன்றே இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story