திடீரென குறுக்கே வந்த நாய் - தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்

கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக இளம்பெண் உயிர் தப்பினார்.
ஈரோடு,
ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துளசிமணி. இவருடைய மகள் வனஜா (வயது 27). ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை கிடைத்து உள்ளது. இந்த நிலையில் வேலையில் சேர்வதற்காக வீட்டில் இருந்து சொகுசு காரில் நேற்று கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.
பெருந்துறை ரோட்டில் பவளத்தாம்பாளையம் பகுதியில் சென்றபோது நாய் ஒன்று காரின் குறுக்கே ஓடியது. இதனால் அவர் நாய் மீது கார் மோதாமல் இருக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கர சத்தத்துடன் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த உடன் காருக்குள் இருந்த காற்றுப்பை (ஏர்பேக்) உடனே செயல்பட்டு திறந்ததால் வனஜா அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று வனஜாவை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் ஈரோடு- பெருந்துறை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதவி பேராசிரியை வேலையில் சேர சென்றபோது விபத்தில் இளம்பெண் சிக்கிய சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.