3 மாதங்களுக்கு முன்பு கடித்த கீரிப்பிள்ளை.. உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன்.. அடுத்து நடந்த துயரம்

கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த சிறுவனுக்கு திடீரென காய்ச்சல் அதிகமானது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் புதுத்தெருவை சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி தேவி. இவர்களுடைய மகன் நவீன் (வயது7) அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். முத்து தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் முத்து மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கோழியை பிடிப்பதற்காக வந்த கீரிப்பிள்ளை, அங்கு தூங்கி கொண்டிருந்த சிறுவன் நவீனின் கையை கடித்து விட்டது.
கீரிப்பிள்ளை கடித்த உடன் சிறுவன் வலி தாங்காமல் துடிதுடித்தான். இதையடுத்து அந்த சிறுவனுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த சிறுவனுக்கு திடீரென காய்ச்சல் அதிகமானது. உடனடியாக பெற்றோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவன் சிகிச்சை பெற்று வந்துள்ளான். நேற்று முன்தினம் நள்ளிரவு காய்ச்சல் அதிகமாகி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து சிறுவன் உடல் சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கீரிப்பிள்ளை கடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் திடீரென இறந்தது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






