ஊஞ்சல் கட்டி விளையாடியபோது விபரீதம்.. சேலையில் கழுத்து இறுக்கி 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

ஊஞ்சல் கட்டி விளையாடியபோது சேலையில் கழுத்து இறுக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தேவி. கணவரை இழந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பெரியார் தெருவில் தனது 12 வயது மகன் அனில்குமாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தேவி தனியார் தொழிற்சாலையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அனில் குமார் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
வீட்டில் யாரும் இல்லாதபோது அனில்குமார் சேலை மூலம் மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடியதாக கூறப்படுகிறது. ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு சுற்றி விளையாடிய போது எதிர்பாராத விதமாக சேலையில் கழுத்து இறுக்கி அனில்குமார் கூச்சலிட்டபடி மயங்கினார்.
அனில்குமாரின் அலறல் சத்தம் கேட்ட ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனில்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து சென்று அனில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






