பரபரக்கும் அரசியல் களம்... கூட்டணிக்காக பல்வேறு கட்சிகள் த.வெ.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தை

த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 5 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள சூழலில் அரசியல் களம் பரபரப்பு நிறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் இந்த முறை மற்றும் த.வெ.க.வும் களம் காண்கிறது. இதனால் 4 முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. ஆட்சியில் பங்கு என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்து இருக்கிறார். இதனால், ஆட்சியமைக்கும் பட்சத்தில், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, கூட்டணி அமைப்பதற்கான முயற்சியையும் த.வெ.க. தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. த.வெ.க. அணியில் அ.ம.மு.க., புதிய தமிழகம் இணைந்து செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தே.மு.தி.க., பா.ம.க. (அன்புமணி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். தொகுதிக்கு 4 பேர் வீதம் அவர் தேர்வு செய்துள்ளார். அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள், மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல தியேட்டர் உரிமையாளர்கள் சிலரும் சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் என குறிப்பிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் தேர்வை விஜய் நடத்தி முடித்து, உடனடியாக அதற்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளார்.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் அரசியல் பயணம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சீபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்கத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாக மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார்.

இனி வரும் நாட்களில் ஈரோடு மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ச்சியாக ஜனவரி 2-வது வாரம் வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழக அரசியல் அரங்கில் புதிய வரவான த.வெ.க. சட்டசபை தேர்தலில் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும் என்பது விவாத பொருளாக மாறி வருகிறது. இதனால், தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com