திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை ஏறிய வாலிபர் சாவு

மகா தீபத்தை காண தடையை மீறி பக்தர்கள் பலர் மலை ஏறி செல்கின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 3-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும். அதன்படி, நேற்று 7-வது நாளாக மலை உச்சியில் மகா தீபம் காட்சியளித்தது. இதற்கிடையில் மலை ஏறி சென்று மகா தீபம் காண மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் மகா தீபத்தை காண தடையை மீறி பக்தர்கள் பலர் மலை ஏறி செல்கின்றனர். மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி மலையில் இருந்து எச்சரித்து கீழே இறக்கிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் மலை ஏறி சென்றுள்ளார். பாதி மலை வரை சென்ற நிலையில் அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் அவரை மீட்டு மலையில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் பெரம்பலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






