செல்போனில் வேறு ஒருவருடன் நீண்ட நேரம் பேச்சு.. காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்

செல்போனில் வேறு ஒருவருடன் நீண்ட நேரம் பேசியதால் கோவிலுக்கு செல்ல அழைத்து சென்று இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தினார்.
மதுராந்தகம்,
மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சரண் (24). தொழிலாளியான இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மதுமிதாவுக்கும் (வயது 19) பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு காதல் ஜோடிகள் சரண்-மதுமிதா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஓரத்தி பகுதியில் தனியாக வாட கைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். மதுமிதா அடிக்கடி தனது செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இது சரணுக்கு பிடிக்கவில்லை. அவருக்கு மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் யாருடன் பேசுகிறாய் என்ற கேட்டு மனைவி மதுமிதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்- மனைவி இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை சரண் வீட்டுக்கு திரும்பி வந்தபோதும் மதுமிதா வேறு யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் மனைவியை தீர்த்து கட்ட திட்டமிட்டார். இதைத் தொடர்ந்து மதுமிதாவை கோவிலுக்கு செல்லலாம் என்று சரண் அழைத்தார். ஆனால் கணவரின் கொலை திட்டத்தை அறியாத மதுமிதா ஆசையாக கணவருடன் புறப்பட்டு சென்றார்.
அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள மலை பகுதிக்கு மனைவி மதுமிதாவை அழைத்து சென்ற சரண திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதுமிதா கணவரிடம் இருந்து தப்பிக்க கூச்சு விட்டபடி ஓட முயன்றார். ஆனாலும் கொலை வெறியில் இருந்த சரண் கத்தியால் மனைவி மதுமிதாவின் கழுத்தை கொடூரமாக அறுத்து துடிக்க, துடிக்க கொன்றார்.
இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்ததும் கொலையாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கு மதுமிதா ரத்த வெள்ளத்தில் பிண மாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஓரத்தி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மதுமிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதே பகுதியில் பதுங்கி இருந்த சரணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.






