சிவகங்கை அருகே இளம்பெண், வாலிபர் அடுத்தடுத்து தற்கொலை.. காரணம் என்ன..?


சிவகங்கை அருகே இளம்பெண், வாலிபர் அடுத்தடுத்து தற்கொலை.. காரணம் என்ன..?
x

இளம்பெண்ணும், வாலிபரும் அடுத்தடுத்து திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சிவகங்கை


சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிராம். இவர் தாய்லாந்து நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரமிளா (வயது 27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள். பிரமிளா தனது குழந்தைகளுடன் தமராக்கி கிராமத்தில் வசித்து வந்தார். இவரது உறவினர் அஜித்குமார் (25). இவரும் அந்த பகுதியில் சில வீடுகள் தள்ளி வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு பிரமிளா அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின் சிறிது நேரத்தில் அஜித்குமாரும் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் தாலுகா போலீசார் அங்கு சென்று அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவங்களுக்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில் “சம்பவத்தன்று இரவு பிரமிளாவுக்கும், அஜித்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னரே பிரமிளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அஜித்குமார், போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. தகராறுதான் சம்பவத்துக்கு காரணமா? வேறு காரணம் உள்ளதா? என்பது பற்றி முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும்” என்றனர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.

1 More update

Next Story