வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கந்தசாமி எம்.எல்.ஏ உடல் நலக்குறைவால் காலமானார்
வால்பாறை
கோவையை சேர்ந்தவர் அமுல் கந்தசாமி (வயது 60). இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த நிலையில், கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமுல் கந்தசாமியிடம் உடல் நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை வந்தார். அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ உள்பட பலர் வந்திருந்தனர். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில், இன்று மதியம் அமுல் கந்தசாமி உடல்நிலை திடீரென மோசமடைந்தது. டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மதியம் 3.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தனர்.அவரது மறைவுச் செய்தி கேட்டு குடும்பத்தினர்கள் கதறி அழுதனர். தொகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுவாக, ஒரு தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால், உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் ஆணையமும் உடனடியாக அந்தத் தொகுதியை காலியானதாக அறிவிக்கும். ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அதை வைத்து பார்க்கும்போது, டிசம்பர் இறுதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், அதன்பிறகு, சட்டசபை தேர்தலுக்கு 4 மாதமே இடைவெளி இருப்பதால், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என்றே தெரிகிறது.