அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருடன் கூட்டணி பற்றி பேசவில்லை - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

பிரதமர் நரேந்திரமோடி, கோவையில் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பது பெருமையான விஷயம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திண்டுக்கல்,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ எனும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி அவர் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது அங்கு நடந்த மாநகர் மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
“பிரதமர் நரேந்திரமோடி, கோவையில் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பது பெருமையான விஷயம். சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும். 234 தொகுதிகளிலும் வெல்வோம். சட்டமன்ற தேர்தல் கூட்டணி யாருடன் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம். இதில் எந்தவித ரகசியமும் இல்லை.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயார் இறந்தபோது இரங்கல் தெரிவித்தேன். அதேபோல் எனது தாயாரின் இறப்புக்காக நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார். இது நட்புரீதியான சந்திப்பு மட்டுமே. இதில் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை” என்று கூறினார்.






