செய்யாறில் 19-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திமுக அரசைக் கண்டித்தும்; மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் நாட்டில் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து, மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின், தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருகின்ற காரணத்தால், மக்கள் பல்வேறு வகைகளில் சொல்லொண்ணா வேதனையை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
* செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்காமல் வெளி மாநிலத்தவருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, உள்ளூர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதை, விடியா திமுக அரசு கண்டும் காணாமலும் இருந்து வருகிறது.
செய்யாறு தொகுதியில் இயங்கி வரும் நூற்றுக்கணக்கான கல்குவாரிகளில் சட்டத்திற்குப் புறம்பாக, அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதால், தமிழகத்தில் இயற்கை வளங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான அளவு திறக்காததாலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு மாதக் கணக்கில் பணப் பட்டுவாடா செய்யப்படததாலும், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனது தலைமையிலான அம்மா ஆட்சியில், செய்யாறு அரசு மருத்துவனைக்கு புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டு, தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இம்மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாததாலும், நோயாளிகளுக்கு மருந்து முழுமையாக வழங்கப்படாததாலும், நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனது ஆட்சிக் காலத்தில், செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
தமிழ் நாடு மின்சார வாரியத்தின் சார்பில், வெம்பாக்கம் ஊராட்சியில் 123 கே.வி மின்திட்டம் அமைப்பதற்கு எனது தலைமையிலான அம்மாவின் அரசில் அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டுவைத்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பிலும் போட்டு வைத்துள்ள விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தின் சார்பில், 19.7.2025 சனிக் கிழமை காலை 10 மணியளவில், செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளர் ராமு தலைமையிலும்; திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தூசி மோகன், முன்னால் எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள்,
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






