மாற்றுக்கட்சி தலைவரை சந்திக்கும் நிலையில் அதிமுக - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமியின் முதல் ரவுண்டு சுற்றுப்பயணத்தில், பாதி கூட்டணி கட்சிகள் காணாமல் போய்விட்டதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகம் போன்று அடக்குமுறைகளையும், நெருக்கடிகளையும் எதிர் கொண்ட இயக்கம் இன்று இந்தியாவில் வேறு எதுவும் இல்லை. மொழி உரிமை, மாநில உரிமைகள் போன்ற பல்வேறு போராட்டங்களில் திமுக ஈடுபட்டுள்ளது. உயிர் தியாகம் உட்பட எண்ணற்ற தியாகங்களை செய்தவர்கள் இந்த இயக்கத்தில் உள்ளனர். திமுகவை ஒழித்து விட்டால் தமிழகத்தை வீழ்த்திவிடலாம் என்று ஒரு கூட்டம் நினைக்கிறது. ஆனால் அது நடக்காது.
பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக விரைவில் ஐசியுவில் அனுமதிக்கப்படும். கடைசியில் உங்களை காப்பாற்றுவதற்கும் எங்கள் தலைவர் தான் வருவார். திமுகவில் ஒரு பிரச்சினை என்றால் நிர்வாகிகள் அறிவாலயத்திற்கு வருவார்கள். ஆனால் அதிமுகவில் பிரச்சினை என்றால் 'ஹரித்துவார்' செல்வதாகக் கூறிவிட்டு பாஜக தலைவர்களை சந்தித்து விட்டு வருகிறார்கள்.
மாற்றுக்கட்சி தலைவரை சந்திக்கும் நிலையில் அதிமுக உள்ளது. அதிமுக தொண்டர்களும் பாஜகவின் அணியாக மாறி விட்டார்கள். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று பிரசாரம் செய்வதற்கு பதிலாக, முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள். எடப்பாடி பழனிசாமியின் முதல் ரவுண்டில் பாதி கட்சி காணாமல் போய்விட்டது. இரண்டாவது ரவுண்டில் பஸ்ஸில் அவர் மட்டும்தான் தனியாக வருவார்.
இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கை கூட்டணியும் கூட. 2017 முதல் இருந்து வருகிற இந்த கூட்டணியை யாராலும் தொடவும் முடியாது, அசைத்து பார்க்கவும் முடியாது. இன்னும் நிறைய இயக்கங்கள் இந்த கூட்டணியில் இணைய காத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






